உறுப்பினர் சேர்க்கை உற்சாகத்தில் தமிழக வெற்றிக் கழக தஞ்சை நிர்வாகிகள் !!
![](https://voiceup.co.in/uploads/images/20240313/1710342710.jpg?1710342673372)
பாராளுமன்ற தேர்தல் பரபரப்பில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை உறுதிப்படுத்துவதிலும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளை பங்கிடுவதிலும் தீவிரம் காட்டி வரும் வேலையில், தமிழக அரசியலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சத்தமின்றி டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளது.
நடிகராக அறியப்பட்ட விஜய் அவர்களின் அரசியல் பயணம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யின் தலைவா திரைப்பட சிக்கல்களின் போது திமுக அவரை ஆதரித்தது, அதனை தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என பேசப்பட்டது. பின்னர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய போது, அவர் காங்கிரஸில் இணைவார் என்று பேசப்பட்டது.
![](../uploads/ad/1709642514.jpg)
கடந்த பத்தாண்டுகளாக நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பான செய்திகள் அவ்வப்போது எழுந்தபோதும் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அவரது திரைப்பயணத்தை தொடர்ந்தார் நடிகர் விஜய்.
மக்கள் இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம் !!
விஜய் அவரது திரைப் பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதும், 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது திரைப்படங்களில் இமாலய வெற்றிகள் அவரின் நட்சத்திர அந்தஸ்தையும் அதன் முலம் அவருக்கான ரசிகர் படையையும் உச்சம் தொட வைத்தது. விஜய் அஜித் என்ற போட்டிகள் இருந்தாலும், நடிகர் விஜய்யின் திரைப்பட வெற்றிகள் அவரை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிகம் ரசிகர்களாக்கி கொண்டார் நடிகர் விஜய்.
ரசிகர் மன்றங்கள் முலம் பல்வேறு நற்பணிகளை செய்த அவரது ரசிகர்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கம் எனும் இயக்கமாக ஜூலை 2009இல் மாற்றினார். பின்னர் 2011இல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் தனது முதல் அரசியல் கூட்டத்தை நடத்தியது.
தமிழக வெற்றிக் கழகம் !!
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்டம் தோறும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வினை நடத்திய விஜய், அந்நிகழ்வினை அவரது அரசியல் பயணத்தின் முன்னோட்டமாக பார்த்தார்.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகம் எனும் அவரது அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். உடன் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முலம் உறுப்பினர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்தினர்.
![](../uploads/ad/1709642839.jpg)
தஞ்சை தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை !!
தமிழகம் முழுவதும் குழு அமைத்து டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்ட 2 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு கடலூர், நாகப்பட்டினம், திருச்சி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரசிகர் படை அதிகம் அதன் தொடர்ச்சியாக தஞ்சையில் ரசிகர் மன்றங்களும் ரசிகர் கூட்டமும் அதிகம் என்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் விஜய சரவணன்.
கடந்த 5 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் முலம் விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு ரொட்டி பால் திட்டம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து திட்டம், ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டங்களை தொடர்ந்து செய்து வருவதாக விஜய சரவணன் உள்ளிட்ட அவரது த.வெ.க கட்சியினர் தெரிவித்தனர்.
விலையில்லா விருந்தகம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும் தமிழகத்திலேயே கொரோனா உள்ளிட்ட காலங்களிலும் தடையின்றி காலை மதியம் உணவு வழங்கி வருவதாகவும் இதனை அறிந்து த.வெ.க தலைவர் விஜய் தஞ்சை மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டியதாக விஜய சரவணன் தெரிவித்தார்
![](../uploads/ad/1709645773.jpg)
தஞ்சை மாநகர தலைவர் ஆனந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரம் ஒரு ஏழை குடும்பத்திற்கு மளிகை பொருட்களை வழங்கி வருவதாகவும் அதே போல் அவரோடு இணைந்து நகர நிர்வாகிகள் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருவதாக கூறினார்.
ஏழை குழந்தைகளுக்கு ரொட்டி பால் வழங்கும் திட்டத்தினை மக்கள் இயக்க மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழழகன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, வல்லம் நகர தலைவர் பாரி உள்ளிட்டோர் செய்து வருவதாகவும் தெரிவித்தார். இவ்வாறு மக்கள் சேவை பணிகளால் மக்களிடம் இவர்களுக்கு உள்ள அறிமுகம் இவர்களது உறுப்பினர் சேர்க்கை பணியை எளிமையாக்குவதாகவும் தெரிவித்தார்.
உறுப்பினர் சேர்க்கை பணிகள் !!
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக பேசிய தமிழழகன், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்களாக விரும்பி சேர்வதாகவும் தெரிவித்தார். மாவட்ட தலைவர் விஜய சரவணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி விரும்பி இணையும் பொதுமக்களையே உறுப்பினராக சேர்ப்பதாகவும் எவரையும் கட்டாயப்படுத்தியோ போலியாகவோ சேர்க்கும் எண்ணம் அறவே இல்லை என்று தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் தஞ்சை மத்திய மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சை தெற்கு மாவட்டத்தில் ஏனாதி மதன் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் நிஜாம் உள்ளிட்டோருடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்தி வருவதாக தெரிவித்த விஜய சரவணன், ஒருங்கிணைந்த தஞ்சையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்ப்போம் என்றார்.
தேர்தல் களம் பரபரக்கும் சூழலில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் த.வெ.க உறுப்பினர் சேர்க்கை பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருவதை அறிய முடிகின்றது...
![](../uploads/ad/1709642418.jpg)
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News