ஆடிப்பெருக்கு வழிபாடு :
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி பூரம் என பல விசேஷங்கள் நிறைந்திருக்கின்றன. ஆடி பெருக்கு சிறப்புகள் என்ன, ஏன் ஆடி பெருக்கு தினத்திற்கு அவ்வளவு சிறப்பாக வழிபடுகிறது என்பதைப் பார்ப்போம்...
ஆடி மாதம் தொடங்கினாலே கிராமங்கள் திருவிழாக்களால் களைக்கட்டத் தொடங்கி விடும். தெய்வீகம் பொருந்திய ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி 18 (ஆடிப்பெருக்கு), கிராமங்களில் கோயில் திருவிழா என விசேஷங்கள் நிறைந்ததாக மக்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கக்கூடிய அருமையான மாதம்.
ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம் :
ஆடிப்பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடியின் 18 வது நாளில் தான் வருகிறது. ஆடிப்பெருக்கு 18 ஆம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடி என்பது நீர் சக்திகள் மற்றும் இயற்கை சக்திகள் தொடர்பான மத நடைமுறைகளை குறிப்பாக சக்தி தேவிக்கு உறுதியுடன் கடைப்பிடிக்கும் மாதம் ஆகும். இந்த மாதத்தில் நீர்மட்டம் உயிரை தொடங்குவதால் விதைப்பதற்கும் நடு செய்வது நடவு செய்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. இயற்கை அன்னை ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் வகையில், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இவ்விழா காவிரி ஆற்றங்கரையிலும் தமிழகத்தின் பிற முக்கிய நதிகளின் கரைகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது
ஆடி மாதத்தில் அனைத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து, சிறப்பாக கொண்டாடும் ஒரு நாள் ஆடிப்பெருக்கு திருநாளாகும். ஆடிப்பெருக்கு, ஆடி பதினெட்டு, ஆடி பதினெட்டாம் பெருக்கு என பல பெயர்களால் அழைக்கப்படும் தமிழகம் முழுவதும் நதித்துறைகளில், ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். உழவு தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளை வணங்கி, பூஜை செய்யும் திருநாள் இந்த ஆடிப் பெருக்கு நாளாகும்.
பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். அப்படிப்பட்ட ஆடி மாதத்தில் அனைத்து நல்ல காரியங்களையும் துவங்கலாம், செய்யலாம் என சிறப்பித்து சொல்லப்படும் நாள் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளாகும். இந்த நாளில் துவங்கப்படும் செயல்கள் அனைத்தும் பெருகி, வளரும் என்பது ஐதீகம். அதனால் தான் ஆடிப்பெருக்கு நாளில் திருமண பேச்சுக்கள், திருமணத்திற்கான ஏற்பாடுகள், திருமணத்திற்கு நகை வாங்குவது, புத்தாடை வாங்குவது, புதிய தொழில், கடை திறப்பது உள்ளிட்ட பல சுபகாரியங்களை செய்கிறார்கள்.
![](../uploads/ad/1690866488.jpg)
ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி, மஞ்சளில் பிள்ளையார் செய்து, தேய்காய், பழம், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவார்கள். பெண்கள் பலர் புதிய தாலி கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். புதுமண தம்பதிகள் தங்களின் திருமண மாலையை பொங்கி வரும் காவிரி ஆற்றில் விட்டு, பூஜை செய்வார்கள். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆறுகள் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் நதித்துறையிலும், ஆறு இல்லாதவர்கள் குளக்கரையிலும் பூஜை செய்து வழிபடுவார்கள்.
வீட்டில் ஆடிப்பெருக்கு வழிபாடு :
ஆறோ, குளமோ அருகில் இல்லாதவர்கள் வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜையை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 2023 ம் ஆண்டில் ஆடிப்பெருக்கு திருநாளானது ஆகஸ்ட் 03 ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம், அதிகாலையில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள சுவாமி படங்களை அழகிய மலர்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டில் உள்ள குழாய்களுக்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைக்கலாம். ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் பிடித்து, அதில் சிறிதளது மஞ்சள், சிறிது உப்பு சேர்த்து பூஜை அறையில் வைத்து, அவற்றை புனித நதிகளாக பாவித்து பூஜை செய்து வழிபடலாம்.
ஆடிப் பெருக்கு நாள் இந்த ஆண்டு வியாழக்கிழமையில் வருவதால் வீட்டில் பூஜை செய்ய நினைப்பவர்கள், தாலி கயிறு மாற்றிக் கொள்பவர்கள் காலை 10.35 முதல் 11.45 வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் இலை போட்டு படையல் வைப்பவர்கள் பகல் 12 மணிக்கு பிறகு 01.30 மணிக்குள் செய்யலாம். தாலி கயிறு மாற்றுவது உச்சி கால வேளையான பகல் 12 மணிக்கு பிறகு மாற்றக் கூடாது. காலை வேளையில் மாற்றுவது சிறப்பானதாகும். அன்று காலை 6 மணி முதல் 07.30 மணி வரை எமகண்டம் என்பதால் 10.35 முதல் 11.45 வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
![](../uploads/ad/1690866515.jpg)
ஆடிப்பதினெட்டு தமிழர்களின் கலாச்சார மரபில் தொன்று தொட்டு இருந்துவரும் ஓர் அழகான பண்பாட்டுத் திருவிழா ஆகும். அனைவரும் ஆடிப்பெருக்கினை கொண்டாடி மகிழ்வோம்! வாழ்வில் வளம் சேர்ப்போம்
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News